A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

சம்பளம் வழங்கக் கோரி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தொண்டியில் பரபரப்பு

News

தொண்டி: சம்பளம் வழங்கக் கோரி தொண்டி பேரூராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இன்று காலை திடீரென துப்புரவு தொழிலில் ஈடுபட மறுத்து, பேரூராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முறையாக ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் தொண்டி புதிய பஸ் நிலையத்தில் ஊதிய உயர்வு, ஊதியத்தை முறையாக வழங்குதல், பணியின் போது பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா காலகட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் ஊதியத்தை முறையாக வழங்காத நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து துப்புரவு தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளித்தனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில்,‘‘ மற்ற இடங்களை விட இங்கு ஊதியம் குறைவாகத்தான் கொடுக்கிறார்கள். அதையும் முறையாக வழங்குவது இல்லை. பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவது இல்லை. இது குறித்து பல முறை கூறியும் பலனில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்,’’என்றனர்.

1093 Days ago

Video News