A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

திண்டிவனம் அருகே காரை வழிமறித்து கொள்ளை: 2 சென்னை வாலிபர்கள் கைது

News

திண்டிவனம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த சார்வாய் புதூர் பகுதியை சேர்ந்தவர் முகமதுஜுன்னா(37). ஊறுகாய் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் மேலாளராக  ராஜா(30), என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காலை தலைவாசலில் இருந்து ராஜா மற்றும் கேஷியர் நிதி சக்கரவர்த்தி(28), கார் ஓட்டுனர் கிருஷ்ணன்(24) ஆகியோர் ஊறுகாய் தயாரிப்பதற்காக மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிப்பிஞ்சு வாங்க 30 லட்சம் ரூபாயுடன் காரில் சென்றனர். அப்போது பெருமுக்கல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 8 மர்ம நபர்கள் காரை வழிமறித்து  காரின் கண்ணாடிகளை உடைத்து ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து பையில் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தேடி வந்தனர். நேற்று திண்டிவனம் மரக்காணம் சாலை சிறுவாடி பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக்கை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர்கள், சென்னை கோவூர் பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் திலீப் (27), சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த இளையகுமார் மகன் அஜில் குமார்(19) என தெரியவந்தது. மேலும் இவர்கள் பெருமுக்கல் பேருந்து நிறுத்தத்தில் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

934 Days ago