A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளி சத்துணவில் அழுகிய முட்டைகள் வழங்குவதாக எழுந்த புகாரால் மீண்டும் சர்ச்சை

News

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சத்துணவில் தரமற்ற அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாக எழுந்துள்ள புகாரால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுடன் தினமும் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு மையங்களுக்கு வரும் முட்டைகள் தரமற்றதாக இருப்பதாக சத்துணவு மைய பணியாளர்களே புகார் தெரிவித்து வருகின்றனர்.நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட ஜூன் மாதத்தின் முதல் 2 வாரங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்ட முட்டைகள் தரமற்றதாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. பிறகு ஜூன் மாத இறுதி வாரத்திலும் இதேபோல் புகார் எழுந்தன. இதற்கு கடுமையான வெயில் அடிப்பதால் முட்டைகள் கெட்டுப்போய் விட்டதாக ஒன்றிய அலுவலகங்கள் தரப்பில் பதில் கூறப்பட்டன. இந்நிலையில் மீண்டும் கடந்த ஒரு வாரமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் 50 சதவீத முட்டைகள் அழுகி வீணாகி வருவதால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமத்தூர், வயலப்பாடி, ஓலைப்பாடி, பள்ளக்காளிங்கராயநல்லூர், மேட்டுக்காலிங்கராயநல்லூர், திருமாந்துறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக சத்துணவில் சமைக்கப்படும் முட்டைகளில் பெரும்பாலானவை அழுகி வீணாகி போனதாக கூறப்படுகிறது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லையென்று இந்த பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள், சமையலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இப்படி அழுகி வீணாகும் முட்டைகளை சமையலர்கள் குப்பையில் எறிந்து விட்டு எஞ்சிய முட்டைகளை மாணவர்களுக்கு வழங்குவதால் நிறைய மாணவர்களுக்கு முட்டை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தினம்தோறும் இப்படி அழுகிய முட்டைகளை பள்ளிகளுக்கு வழங்கி ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் கொள்ளையடித்து வருகின்றனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் தரமான முட்டைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் தமிழக முட்டைகளின் இறக்குமதியை அண்டை மாநிலங்கள் குறைத்துள்ளதால் கோழிப்பண்ணைகளில் தேக்கமடைந்துள்ள கெட்டு, அழுகிப்போன பழைய முட்டைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். இதுதான் இந்த பிரச்னைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது . இதுகுறித்து வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் தெரிவித்ததாவது: ஜூன் முதல் வாரத்திலும், கடைசி வாரத்திலும் முட்டைகள் கெட்டுப்போய் இருந்ததாக புகார்கள் வந்தன. அதனால் வேகவைக்கும் முன்பே தண்ணீரில் போட்டு மூழ்குகிறதா என பரிசோதித்த பிறகே சமைக்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கடந்த 2 நாட்களில் முட்டை கெட்டுப்போனதாக புகார்கள் வரவில்லை. இருந்தும் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன முட்டைகளை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டாம். தரமான முட்டைகளை மட்டும் பரிசோதித்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

1735 Days ago

Video News